Thursday, 27 December 2012

எங்கிருக்கிறாய் என் அன்பே ..




வாடை காற்றில் குளிராக நிற்கிறாயோ 
மேகத்தினுள் மழையாக இருக்கிறாயோ 

என் அகத்தினுள் அரூபமாக  நிற்கிறாயோ 
என் அகந்தையை அகற்றும் கனிவாக இருக்கிறாயோ 

அர்த்த ராத்திரியில் தூக்கமாக நிற்கிறாயோ 
தூக்கத்தில் கனவாக இருக்கிறாயோ 

அலைகடலின் ஆழமாக நிற்கிறாயோ 
கடல் அலையின் நுரைகளாக இருக்கிறாயோ 

உன்னை காண பூக்களாய் மலர்ந்து நிற்கிறேன் 
நீயோ பாலைவனத்தில் மழையாக இருக்கிறாய்  

நீ இருந்தும் இல்லாமல் நிற்கிறாய் 
நான் உன்னை தொலைத்தும் தொலையாமல் தேடிகொண்டு  இருக்கிறேன் 


Saturday, 22 December 2012

நிழலாய் ஓர்மைகள்




புலர்ந்தும் புலராத காலை பொழுதில் 
உன்னை காண ஓடிவந்த காலங்கள் 
யாவும் மறக்க முடியாமல் கனவுகளில் 
விழிகளில் மட்டும்  ஓர்மையில்

இருள் சூழ்ந்த இரயில் வண்டி கூட 
உன்பகை கொண்டதால் புகை சூழ்ந்து
சிவப்பு விளக்கை எனக்காய் இட்டு 
பச்சை விளக்கோடு பாசமில்லாது போனதே

இடைவெளி இல்லாது ஒலித்த 
அலைபேசி கூட
அன்பே உன்அழைப்பு இல்லாமல்    
அலங்கோலமாகி போனதே 


உணர்வில்லா உறிஞ்சல்களுடன் 
சுவையான காபி கூட
உன் அருகாமை இல்லாது
சுவை இல்லாது போனதே 

நிறைவான வாதங்களுடன் 
அறை முழுவதும் நின்ற விவாதங்கள் யாவும் 
சிறையாகி போனதே எனி அது 
பிறையாகி வளர்வது என்னாளோ 

கடந்த கால நினைவுகள் எல்லாம் 
கல்லறையினுள் தூங்கினாலும் 
கலங்காது வந்து செல்வேன் 
காதல் என்னுள் தூங்காது இருக்கும் வரை 







Sunday, 9 December 2012

தேடுகின்றேன் உன் நினைவுகளை


பனிபடர்ந்த காலை பொழுது
உறைகின்ற குளிர் காற்று
உறையாத உன் நினைவு
தேடினேன் உன்னை

தூரத்தில் ஓர் உருவம் 
மங்கலாய் தவிப்போடு
தவறவிட்ட உன்னைத்தேடி 
அருகில் சென்றேன்   
நீ தொலைத்த என்நினைவு
திசை தெரியாமல்

தேடுகின்றேன் உன்நினைவுகளை 
நாம்நின்ற இடங்கள் தனில் 
தனித்து புலம்புகிறேன்
அனாதையான என்
நினைவுகளுடன்

வாழ்கை சகரத்தில்
வழி துணையாய் வந்தவளே
கால சகரத்தில்
காணாமல் போனதேனோ
அறிவாயோ என்
நெஞ்சின் தவிப்பை

வருவேன் என்று
சொல்லி சென்றாயே
இறந்தகாலம் முடிந்து
எதிர்காலமும் வந்துவிட்டது
வசந்த காலம் மட்டும்
வரவே இல்லை நீ இல்லாமல்

இளமையின் சுவடுகள்
முதுமையாகி ஊன்று
கோலாகி போனாலும்
காலத்தை தொலைத்து
காலனுடன் சென்றாலும்
கவனமாக பிறப்பேன்
உன் அருகில் நீங்காத
 துணையாக  
 

Thursday, 6 December 2012

முதுமையின் புலம்பல்


இளமை அகன்றுவிட  முதுமை அணைத்துக்கொள்ள
இயலாமையில் சோர்ந்துபோய் அசைபோடும் மனது

காலமதில் பயிர் செய்யாமல்  காத்திருந்த கன்னிதனையும்
கடைத்தெருவில் களைந்துவிட்டு  கவனமில்ல வாழ்வுதனை
கடமையாக வாழ்ந்தேனே

இளமைதனின் முறுக்கோடு இயலாதது ஏதுமில்லைஎன்று
அகங்காரம் அங்கமெல்லாம் ஆபரணமாய் சூடி கொண்டு 
ஆனந்தமாய் இருந்தேனே 

தனித்திருப்பது சுகம் என்றும்  இறைவன் அருள் வரம் என்றும் 
பந்த பாசங்கள் சிறை என்றும் துணை என்பது துன்பம் என்றும் 
காலமதை வீணே கழித்தேனே 
   
வாக்குகளும் வாதங்களும் வசந்தகால பருவத்திலே
வசந்தத்தை வலுவிழக்க செய்தனவே இன்று
வாதம் செய்ய கூட நீ இல்லாமல் வாய் மூடி கிடகின்றேனே

உடல் தளர்ந்து உறுதுணையும் இல்லாமல் 
உற்றாரும் பெற்றாறும் இல்லாமல் 
பலமெல்லாம் பலகீனமாய் மனமிடும் பணிஅதனை 
உடல்கூட உதாசீன படுத்தும் உரமில்லா உடல்கொண்டு 
உழலுகின்றேன் உள்ளினுள்ளே 

காலமதை தவறவிட்டு காலனுக்கு காத்திருக்கும் முதுமைதனில் 
கனவிலும் நனவிலும் கடந்துவிட்ட காலம்தனை வீழும் வரை வீழாது 
வேகும்வரை நினைதிருப்பேனே